இந்தி தான் இந்தியாவின் முதன்மை மொழி என்றால் நாம் யார்? இரண்டாம் தர குடிமக்களாக வாழ என்ன அவசியம் இருக்கிறது? என திருப்புவனத்தில் மொழிப்போர் தியாகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.  

சிவகங்கை மாவட்டத்தில் திமுக மகளீர் அணித்தலைவி கனிமொழி எம்.பி., கடந்த இரு தினங்களாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதன் இறுதி நிகழ்ச்சியாக திருப்புவனத்தில் திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், கூறியதாவது: 

இந்தி தான் இந்தியாவின் முதன்மை மொழி என்றால் நாம் யார்? இடம் தர குடிமக்களாக வாழ என்ன அவசியம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். தமிழர்களின் அடையாளங்களை, பண்பாட்டை, மொழியை தொட்டு பார்க்க நினைத்தால் மறுபடியும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார். மொழி போரை நடத்தி காட்டியவர்கள் நாங்கள். பிரதமரை திரும்பி போ என்று சொன்னவர்கள் நாங்கள். விரைவில் எங்கள் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் நடக்க முடியாது என அதிமுக தலைவர்களை எச்சரித்தார். 

தொடர்ந்து எடப்பாடியார் என்று அழைப்பது, மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பால் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். நீங்கள் முதல்வராக அறிவிக்கப்பட்ட போது எடப்பாடி யாரு என்று மக்கள் தேடி தேடி திரிந்தார்கள் ஆதலால் அப்படி அழைத்தார்கள் என கனிமொழி எம்.பி. விமர்சித்தார்.