திமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் துரைமுருகன் அவரது மகனுடன் தனது குருநாதர் ஸ்ரீ ஸ்ரீவிபூதி பாபாவிடம் சென்று  ஆசீர்வாதம் பெற்றுள்ளார். 

பகுத்தறிவு கட்சியில் இருந்தாலும், கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்தாலும் திமுக உயர்பதவிகளில் இருக்கும் குடும்பத்தினருக்கு கடவுள் பக்தி உள்ளூர கொழுந்து விட்டு எரிகிறது. அந்த கொள்கைகள் எல்லாம் அடி மட்டத்தொண்டர்களுக்கு மட்டும் தான். தலைமையில் இருக்கும் தலைவரது மனைவி கோயில் செல்வார். பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகப்பரிய பக்திமான் என்பதை அவ்வபோது வெளிக்காட்டுவார். அவரது மகன் கதிர்வேல் ஆனந்த் எம்.பி ஆவதற்காக காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்தார்.  

இந்த நிலையில் தான் பொதுச்செயலாளர் பதவி பொறுப்பேற்றதும் தனது குருநாதர் ஸ்ரீ ஸ்ரீவிபூதி பாபாவிடம் சென்று  ஆசீர்வாதம் வாங்க சென்றுள்ளார் துரைமுருகன். அங்கு விபூதி சாமியார் துரைமுருகனுக்கு ஆளுயர மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து மனமுருக அருள்வாக்கு  அருள்வாக்கு கூறியுள்ளார். அப்போது விபூதி சாமியார் விரைவில் முதல்வர் ஆவீர்கள் என ஆசி வழங்கியதாக கூறப்படுகிறது. 

இந்த சாமியார் துரைமுருகனின் சொந்த ஊரான காட்பாடியை சேர்ந்தவர். இந்த சாமியார் குறித்து அவ்வூரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘’எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும் அதற்கு முன் விபூதி சாமியாரிடம் துரைமுருகன் குடும்பம் ஆசிர்வாதம் பெற்று தான் காரியத்தை ஆரம்பிப்பார்கள். வேலுார் மக்களவை தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என விபூதி சாமியார் முன்கூட்டியே கணித்து கூறினார். அப்படியே அது நடந்தது. 

அதேபோல் இப்போது பொதுச்செயலாளராகி இருக்கும் துரைமுருகனுக்கு விரைவில் முதல்வர் ஆவீர்கள் என அருள்வாக்கு கூறி இருக்கிறார். அப்படி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’என்கின்றனர். ஒருவேளை அடுத்த முறை திமுக ஆட்சி அமைத்தால் சாமியார் வாக்குப்படி துரைமுருகன் துணை முதல்வர் ஆகலாம் எனக்கூறுகின்றனர்.