தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்  நேரத்தில் திட்டமிட்டு திமுக நிர்வாகிகள் மீது ஒரே காரணத்திற்காக பல இடங்களில் பொய் வழக்குகளை பதிவு செய்யப்படுவதை நிறுத்த கோரி திமுக சட்டத்துறை சார்பில் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில்,  முதன்மை செயலாளர் கே.என்.நேரு, நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் தமிழக டிஜிபி திரிபாதியை நேற்று நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தனர்.

அதில், தமிழக காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆளுங்கட்சியின் உத்தரவுப்படி நடந்து திமுகவினரின் மீது கொடுக்கப்படும் புகார்கள் மீது பொய்யான வழக்குப் பதிந்து கைது செய்கின்றனர். ஆனால், அதிமுகவினர், பாஜகவினர் மீது புகார் கொடுத்து அதில் முகாந்திரம் இருந்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.பேச்சுரிமை, எழுத்துரிமையின் அடிப்படையில் திமுகவினர் அரசியல் பிரச்சாரத்தைக் குறிப்பாக சமூக ஊடகங்களில் மேற்கொண்டதற்காக பொய் வழக்குகள் புனைவதைத் தவிர்க்க வேண்டும். ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு எதிராகப் புகார்கள் கொடுக்கப்படும்போது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 

அவ்வாறு பதிவு செய்யவில்லையெனில் ஏன் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தை புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கட்டளையை தமிழக காவல்துறை மீறுகிறது. எனவே, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முறையான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் திமுக சட்டத்துறை தலைவர் சண்முக சுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் அரசும் மற்றும் மத்திய அரசும் மீது எந்த வித எதிர் கருத்து வரக்கூடாது என்பதற்காக, எதிர்கருத்து கூறும் திமுகவினர் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போடப்படுகிறது. ஒரு குற்றத்திற்காக பல இடங்களில் திமுகவினர் மற்றும் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஏன் என்றால் தேர்தல் வரபோகின்ற வருடம் என்பதால்,  திமுகவினர்கள் மீது அதிக வழக்குகள் போடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநி திமாறன் ஆகியோர் மீது பல்வேறு இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றியும் தனியாக இன்னொரு புகாரை டிஜிபியிடம் கே.என்.நேரு கொடுத்தார்.