கோயம்புத்தூர் 

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் தற்கொலை செய்வதாக சொன்ன எம்.பி.களுக்கு எலிமருந்து பாக்கெட் அனுப்பிய பொள்ள்ளாசி இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு இம்மிடிபாளையத்தை சேர்ந்தவர் பெரியார்மணி (38). தொழிலாளியான இவர் நேற்று காலை கிணத்துக்கடவில் உள்ள கூரியர் நிறுவனத்துக்கு வந்தார். 

பின்னர் அவர் பொள்ளாச்சி தொகுதி மகேந்திரன் எம்.பி.க்கு டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு ஒரு எலிமருந்து பாக்கெட், அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பினார். 

அவர் அனுப்பிய அந்த கடிதத்தில், "தங்கள் கட்சி சார்பாக 37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பல வருட பிரச்சனைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. 

இந்த பிரச்சனை தொடர்பாக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாமல் தற்கொலை செய்வோம் என்று டெல்லியில் தங்கள் கட்சியின் நவநீதகிருஷ்ணன் எம்.பி.பேசியது வரவேற்கத்தக்கது. இதற்கு உதவும் நோக்கில் எலிமருந்து அனுப்புகிறேன்" என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மகேந்திரன் எம்.பி.யிடம் கேட்டபோது, "எனக்கு எலிமருந்து அனுப்பியதாக கூறுபவர் தனது சுய விளம்பரத்துக்காக இப்படி செய்துள்ளார். இதுபோன்று வெடிமருந்தும் அனுப்பலாம் அல்லவா? ஆகவே அவரது செயல் கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர் மீது நான் காவநிலையத்தில் புகார் செய்யவில்லை. 

நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து மக்களுக்கு உழைக்கின்றோம். தமிழக மக்களின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டு முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள். அதன்பின் அவையை நடத்துங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

அதே போல நாடாளுமன்றத்தின் முன்பகுதியிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டு நலனுக்காக எந்த போராட்டத்திலும் ஈடுபட தயங்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.