2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் நிலை என்னவாகும்? இதை நினைக்கும்போதே எனக்கு அச்சமாக உள்ளது.

சனாதன சதிக் கூட்டத்திடமிருந்து தமிழ் நாட்டை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதேபோல 2024- இல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் முன் முயற்சியை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கார் சுடர் விருது, வைகோவுக்கு பெரியார் விருது, நெல்லைக் கண்ணனுக்கு காமராஜர் விருது உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் உரையாற்றும்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவன், 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன் வைத்து கோரிக்கை ஒன்றை முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்தார். திருமாவளவன் பேசுகையில், “சனாதன சதிக் கூட்டத்திடமிருந்து தமிழ் நாட்டை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதேபோல 2024- இல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் முன் முயற்சியை எடுக்க வேண்டும். 

2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் நிலை என்னவாகும்? இதை நினைக்கும்போதே எனக்கு அச்சமாக உள்ளது. அப்படி ஒரு நிலை வராமல் தடுப்பதற்கான ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். சிலர் (மம்தா பானர்ஜி) காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை அமைக்க வேண்டும் என்று முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற திட்டங்களுக்கு திமுக உடன் பட்டுவிடக் கூடாது. காங்கிரஸ் அல்லாத ஓர் அணி என்பதே பாஜகவுக்கு உதவுவதற்கான ஒரு திட்டம் தான்” என்று திருமாவளவன் பேசினார். 

திருமாவளவனின் இந்தப் பேச்சு தொடர்பாக ரவிக்குமார் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் அப்படி நடத்துகிற கட்சி, தனது கட்சிக்கான கோரிக்கையையோ அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்துக்கான கோரிக்கையையோ முன்வைப்பதுதான் தமிழ்நாட்டு வழக்கம். அதற்கு மாறாக தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும், இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும், சமூகநீதி சமூகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தொலை நோக்கோடு கோரிக்கை விடுக்கிற தலைவராக திருமாவளவன் இருக்கிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.