You have done all the treachery dmk now the acting in game Ramadoss
அத்தனை துரோகங்களையும் செய்தது திமுக தான். ஆட்சியில் இருக்கும் போது இத்தகைய துரோகங்களை செய்யும் திமுக, ஆட்சிப் பொறுப்பை இழந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும். அத்தனையும் வேடம் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
கேள்வி: ஊதியப் பாகுபாட்டைக் கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?
பதில்: ஒரே கல்வித்தகுதியும், ஒரே பணிச்சுமையும் கொண்ட பணிக்கு மாறுபட்ட ஊதியங்கள் வழங்குவதை மன்னிக்க முடியாது. 2009 மே 31-ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன் ரூ.2,800 தர ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதன்பிறகு, அதாவது 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்ற அளவில் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2009 மே மாதத்தில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து படிகளுடன் சேர்த்து ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதன்பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.26,500 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் இடைவெளிக்காக ரூ.15,500 ஊதியக் குறைப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் மிகவும் நியாயமானது. இந்தப் போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நானும் அறிக்கை வெளியிட்டேன். இவ்வாறு செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உரிமை இல்லை.
காரணம் தெரியுமா?....
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் 2006-ஆம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றாலும், தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டு முதல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த பரிந்துரைகளின்படி தான் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.15500 வரை ஊதியம் குறைத்து வழங்கப்படுகிறது. 2009-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தது யார்? திமுக தானே? அவர்கள் தானே அந்தக் குறையை களைந்திருக்க வேண்டும்.... செய்தார்களா? செய்யவில்லையே?
2009-ஆம் ஆண்டு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட பிறகும் இதை பா.ம.க. சுட்டிக்காட்டியது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக அரசு அந்தக் குறையை சரி செய்யவில்லை. அதேபோல் 2011 முதல் இப்போது வரை ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசும் இந்தக் குறையை சரிசெய்யவில்லை.

இப்போது சொல்லுங்கள்.....
ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் இதுபற்றி கருத்துக் கூறும் தகுதி உண்டா? இது பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் செயல் அல்லவா?
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விவகாரம் மட்டுமல்ல.... மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது, ஹைட்ரோகார்பன் மற்றும் நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி அளித்தது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்தது, கச்சத்தீவை இலங்கைக்கு வாரி வழங்கியது என அத்தனை துரோகங்களையும் செய்தது திமுக தான். ஆட்சியில் இருக்கும் போது இத்தகைய துரோகங்களை செய்யும் திமுக, ஆட்சிப் பொறுப்பை இழந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும். அத்தனையும் வேடம். ஏமாற்ற நினைப்பவர்கள் இப்படித்தான் நாடகமாடுவார்கள்.... மக்களாகிய நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்!
