Yogi adityanath
பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்களில் அடிக்கடி கூறும் வார்த்தையான, ‘நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், உங்களையும் வாங்க விடமாட்டேன்’ என்பதை கொஞ்சம் மாற்றி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘நானும் தூங்கமாட்டேன், அதிகாரிகளையும் தூங்கவிடமாட்டேன்’ என்ற ரீதியில் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் வேலை வாங்கி வருகிறார்.
அதிரடி நடவடிக்கை
உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிரடியாக திட்டங்களையும் அறிவித்து, நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.ஆதித்யநாத் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் திணறி வருகின்றனர்.
இரவு வரை பணி
கடந்த 3-ந் தேதியில் இருந்து முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு துறை அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடன் நடு இரவு வரை ஆலோசனைகள் நடத்தி வருவதால், சரியான தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். காலையில் 9 மணிக்கு அனைத்து பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு, எத்தனை மணிக்கு வீடு திரும்புவோம் என்று தெரியாது. அந்த அளவுக்கு ஆலோசனைகள், பணிகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கிய அலுவலகங்களாந பாபு பவன், இந்திரா பவன், ஜவஹர் பவன், இணைப்பு கட்டிடம் ஆகியவற்றில் நடுஇரவு வரை தொடர்ந்து விளக்குகள் எரிந்து கொண்டு, அதிகாரிகள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஈடுகொடுக்க முடியாது
ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், “ முதல்வர் ஆதித்யநாத் வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்கமுடியாது’’ என்றார்.
தலைமைச் செயகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ முதல்வர்ஆதித்யநாத் மிகவும் கூர்மையான புத்தி மட்டுமல்லாமல், அனைத்து துறைகள் குறித்தும், திட்டங்கள், பணிகள் குறித்தும் ஆழ்ந்த அறிவு கொண்டு இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.
எச்சரிக்கை
முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து, அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏறக்குறைய 18 மணிநேரம் வரை பணியாற்றுகிறார்கள். அவ்வாறு பணியாற்ற முடியாத அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாமல், விருப்ப ஓய்வு பெற்று செல்லும் படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், பெட்டிப்பாம்பாக அடங்கி அதிகாரிகள் வேலை செய்து வருகிறார்கள்.
தூக்கமில்லை
லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில் 5-வது தளத்தில் முதல்வரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த தளத்துக்கு அடிக்கடி அதிகாரிகளும், அமைச்சர்களும் வந்து கொண்டு இருப்பதால் லிப்ட் ஆப்ரேட்டர்கள், பியூன்கள், பாதுகாப்பு அதிகாரிகள், துறை அதிகாரிகள் என ஓய்வில்லாமல், தூக்கமில்லாமல் இருந்து வருகின்றனர்.
அமைச்சர்கள் பயணம் ரத்து
இதற்கு முன் முதல்வரின் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்களின் துறை அதிகாரிகளை கலந்து கொள்ளச் செய்து வந்தனர். ஆனால், முதல்வராக ஆதித்யாத் வந்தபின், அமைச்சரவைக் கூட்டத்தில் துறை அதிகாரிகளை அனுப்பாமல், அமைச்சர்களை பங்கேற்று வருகின்றனர். அமைச்சரவைக் கூட்டத்தின் ஏதாவது முக்கிய கூட்டங்கள் இருந்தாலும் அதை ரத்து செய்து விடுகிறார்கள்.
முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டங்கள் இரவு வரை நீடிப்பதால், செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அதிகாரிகளும், ஊழியர்களும் ஊடகங்களுக்கான செய்திகளை அனுப்ப மிகவும் சிரப்படுகின்றனர். அதேபோல பத்திரிகைகளும், அரசிடம் இருந்து அறிக்கைகளை எதிர்பார்த்து தங்களின் அச்சடிக்கும் பணி நேரத்தையும் மாற்றியுள்ளன.
