முஸ்லிம் சமூகத்தினரின் ‘முத்தலாக்’ முறையை எதிர்க்காத அரசியல்வாதிகள், மகாபாரதத்தில்திரவுபதி உடையை துச்சாதனன் துகில் உரியும் தடுக்காமல் அமைதி காத்தவர்களுக்கு சமம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் விவகாரத்து வழக்கமான முத்தலாக் முறை பெண்களுக்கு எதிரானது, சுதந்திரத்தையும் உரிமையையும் பறிக்கிறது என்று பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. முஸ்லிம் பெண்களில் ஒருபகுதியினரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முத்தலாக் முறையை நீக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் லக்னோ நகரில் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் 91-வது பிறந்தநாள் விழாவில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர்பேபசுகையில், “ இப்போது நாட்டில் முஸ்லிம் சமூகத்தினரின் முத்தலாக் குறித்து புதிய புதிய விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் பலர் மவுனம் காத்து வருகின்றனர்.

இவர்களின் மவுனம் மகபாரதத்தில், பொதுச்சபையில் திரவுபதி துச்சாதனனால் துகில் உரியப்பட்டபோது, அதைத் தடுக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பதற்கு சமம். அப்போது அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து, இதற்கு யார் பொறுப்பு என்று திரவுபதி கேட்டார்?

அங்கே இருந்தவர்கள் ஒருவர்கூட பேசவில்லை. அப்போது அங்கே துரியோதனன் அமைச்சரவையில் இருந்த மாபெரும் பண்டிதர் விதுர் கூறினார் “ குற்றத்துக்கு துணைபோகிறவர்களும், குற்றம் இழைத்தவர்கள்தான். குற்றம் நடக்கும் போது அதைத் தடுக்காமல் வேடிக்கைபார்த்து, அமைதியாக இருப்பவர்களும் குற்றம் செய்தவர்களுக்குபொறுப்பானவர்கள்தான்.

ஆதலால், பெண்களுக்கு தீங்கு இழைக்கும் முத்தலாக் முறையை பார்த்துக் கொண்டு அமைதியாக அரசியல்வாதிகள் இருக்க கூடாது. அதை ஒழிக்க வேண்டும். நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ’’ என்று வலியுறுத்திப் பேசினார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசுகையில் கூட, முஸ்லிம் பெண்களை சுரண்டும் இந்த முத்தலாக் முறையை ஒழித்து, நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.