கழகம் எதிர்கட்சியாக இருக்கும் நிலையில் எப்படியாவது ஆளுங்கட்சியாகிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் ஈரோடு மண்டல மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க.

இரண்டு நாள் மாநாட்டில் முதல் நாளான இன்று கொடியேற்றம், மாநாடு வரவேற்புரை! என்று மிக ஃபார்மலான விஷயங்கள் மட்டுமே அரங்கேறியிருக்கின்றன. சுமார் 2 மணியளவில் ‘நெக்ஸ்டு! ரெஸ்ட்டு’ என்று லஞ்ச் பிரேக் விட்டு ஆளாளுக்கு ஆகாரம் எடுக்க போய்விட்டார்கள்.

இதன் பிறகு கூடியிருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, கழக எழுச்சிப் பாடல்களை மேடையில் பாடிக் கொண்டிருக்கிறது ஒரு டீம். ஃபார்மாலிட்டிக்காக கருணாநிதியை பற்றி ஒரு பாடலைப் பாடிவிட்டு மற்றபடி முழுக்க முழுக்க ஸ்டாலினையே ஆஹோ! ஓஹோ! என புகழ்ந்து தள்ளிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்க தளபதி அண்ணன் தங்கம், சிங்கம் என்று தாறுமாறாகப் புகழ்ந்து பாட்டுகளைப் பின்னி எடுக்கிறார்கள். போகிற போக்கில் ஆளும் கட்சியையை விட்டு வைக்கவில்லை...

‘தமிழ்நாடு போற போக்கை கேளுங்க,

அது தலைகீழா தொங்குறதை பாருங்க.

ஈ.பி.எஸ்.ஸுக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் குடுமி சண்டையாம்,

பெரும்பான்மை இல்லாத ஆட்சி நடக்குது,

உலகத்தில் இல்லாத கூத்து நடக்குது.

இந்த அக்கிரமத்துக்கு பஞ்சாயத்து மோடிதானுங்க.’

என்று வெளுத்து எடுக்கிறார்கள்.

அத்தோடு விட்டார்களா?...’உலக மகா நடிகன் யார்? மோடியின் கையிருப்பு யார்?’ என்று கேட்கின்றனர். அதற்கு தொண்டர்கள்  பன்னீர், பழனிசாமி, ஜெயக்குமார், வேலுமணி என்று ஆளாளுக்கு ஒரு சில பெயரைச் சொல்ல...

‘உலக மகா நடிகன் ஓ.பி.எஸ்! மோடியின் கையிருப்பு இ.பி.எஸ்.’ என்று போட்டுத் தாக்குகிறார் பாடகர்.
கணிசமாக கடுப்புகள், பிரச்னைகள் இருந்தாலும், தொண்டர்களை குஷியாக்கியபடி உருண்டு கொண்டிருக்கிறது தி.மு.க. மாநாடு!