பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் அமைதி குழு அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சந்தானம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.  பாலமேடு 15 வார்டுகளை கொண்ட பேரூராட்சியாக உள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வரும் நிலையில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 

இந்த ஆண்டும் வழக்கம் போல ஜனவரி 16ம் தேதி ஜல்லிக்கட்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விழா குழுவில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படவில்லை.  ஆனால் அருந்ததியர் சமூகத்தினரிடம் இருந்து நன்கொடைகள் உள்ளிட்டவை மட்டும் பெறப்பட்டுள்ளன. அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர்கள் 10 காளைகளை வளர்த்து வருவதோடு, தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்று வருகின்றனர்.  ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளுக்கும்,  மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்குவதற்காக பெறப்படும் நன்கொடைகள் கோடி கணக்கில் உள்ளன . ஆனால் அவை தொடர்பான கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. 

எனவே  ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் அமைதி குழு அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது