அண்மையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரினம் நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக ராய்ச்சூரில் இருந்து அவர் பஸ்சில் கரேகுட்டா கிராமத்திற்கு சென்றார். அவர் வந்த பஸ்சை மின் உற்பத்தி நிலையை ஊழியர்கள் வழிமறித்து போராட்டம் நடத்தினர். 

குமாரசாமி அவர்களை பார்த்து, ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கு போடுகிறீர்கள், பிரச்சினைகளை எங்களிடம் வந்து சொல்கிறீர்கள் என்று கடும் கோபத்துடன் பேசினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய சித்தராமையா, நான் முதலமைச்சராக  இருந்தபோது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். ஆனால் நீங்கள் ஏன் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள். வெறும் பேச்சு, கோஷங்களால் வளர்ச்சி ஏற்படாது என கடுமையாக பேசினார்.

பாதாமி தொகுதியில் பாஜக  காங்கிரசை விட 9 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுள்ளது. பிரதமர் மோடி இந்த தொகுதியில் என்ன வேலை செய்துள்ளார் என்பதற்காக நீங்கள் ஓட்டு போட்டீர்கள்.

வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஆனால் ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கா? என மிகுந்த கோபத்துடன் பேசினார்.