தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்றும் தமிழ் மண்ணில்  பாஜக மலர்ந்தே தீரும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எங்கெங்கு போகிறாரோ அங்கெல்லாம் கூறி வருகிறார்.

ஆனால் தமிழகத்தில் பாஜக காலையும்  ஊன்ற முடியாது, கையவும் ஊன்றவும் முடியாது என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன..


இந்த நிலையில் நேற்று  தமிழகம் முழுவதும், மாலை 6 மணிக்கு மீண்டும் மோடி! வேண்டும் மோடி!! என்ற பிரார்த்தனையுடன் ஏராளமான பெண்கள்  வீடுகளில் தாமரைக் கோலமிட்டு அதில் அழகிய தீபம் ஏற்றினர்.

இதனிடையே கும்பகோணம் ஆனக்காரபாளையம் பகுதியில் வீட்டு வாசலில் தாமரைக் கோலத்தை வரைந்து, அதன் நடுவே அகல் விளக்கை ஏற்றினால் ரூ.1000 அல்லது அந்த தொகைக்கு நிகரான பரிசுப் பொருள் வழங்கப்படும் என யாரோ வதந்தியை கிளப்பியுள்ளனர்.

இதையடுத்து குஷியான பெண்கள் தங்கள் வீடுகளில் தாமரைக் கோலத்தை போட்டு விளக்கையும் ஏற்றி வைத்து காத்திருந்துள்ளனர். ஆனால் யாருமே வந்து ரூபாயோ அல்லது பரிசுப்பொருளோ தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

பாஜக கட்சிக்காரர்கள் தான் அகல் விளக்கை கொடுத்து தாமரை சின்னத்தை கோலமாக வரைந்தால், ரூ.ஆயிரம் அல்லது பரிசுப் பொருளோ வழங்கப்படும் என்று கூறியதாக தெரிவித்தனர். 

ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, அதுபோன்று யாரிடமும் கூறவில்லை என்று மறுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.