சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் நிலை தொடரும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆகையால், சபரிமலைக்கு செல்ல 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதை மீறி தரிசனத்துக்கு வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் "சபரிமலை விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் அது குறித்து பேசக்கூடாது. ஆனால், பெண்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டு சபரிமலை பிரச்சனையின்போது வழிபாடுக்குச் சென்ற பெண்களுக்கு கேரள மாநில அரசு பாதுகாப்பு அளித்தது. 

இந்நிலையில். தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு கேரள அரசு செய்யும் என நான் நம்புகிறேன். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை யார் என்றும் கூறி இருக்கிறார். ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாதது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி விழாவில் பேசிய திருமாவளவன் கூம்பாக இருந்தால் மசூதி, உயரமாக இருந்தால் தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என பேசியது சர்ச்சையாகியது. இந்நிலையில், இந்து கோவிலான சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு அவர் பாதுகாப்பு கேட்டிருப்பது வேடிக்கையாக பேசப்பட்டு வருகிறது.