உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை எடுத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தற்போது 3வது கட்டத்தை எட்டியுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருப்பதால் வேலைக்கு செல்ல முடியாமல், தொழில்களை மேற்கொள்ள முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்ய அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. அரசுடன் சேர்ந்து அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால் தலைநகர் சென்னை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நலிவடைந்த மக்களுக்கும் உதவும் பணியில் பாஜக பெண் பிரமுகர் செளதாமணி தீவிரமாக செயலாற்றி வருகிறார். பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய இவர், தற்போது ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். முதலில் தான் வசிக்கும் பகுதியில் உணவுக்கு வழியின்றி திண்டாடியவர்களுக்கு உணவு வழங்கிய நிலையில், தனது நண்பர்கள் சிலரது உதவியுடன் பிற இடங்களில் இருக்கும் மக்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அரிசி, காய்கறி அடங்கிய மளிகை பொருட்களையும் வழங்கி வருகிறார்.

ஊரடங்கு நேரத்தில் ஓய்வின்றி பணியாற்றும் காவலர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மிக அவசியமாக தேவைப்படும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி அளித்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் உதவியுடன் திருப்பூரில் 5000 முகக்கவசங்கள் ஆர்டர் செய்து அவற்றை சென்னை காவல்துறையிர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரிடையாக வழங்கி வருகிறார். மேலும் முகக்கவசங்களை அந்தந்த பகுதி பாஜக நிர்வாகிகளிடம் மக்களுக்கு விநியோகிப்பதற்காகவும் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய இருப்பதாக செளதாமணி தெரிவித்திருக்கிறார்.

அதே போல திமுக சார்பாக தமிழகம் முழுவதும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி கடந்த 1 மாதமாக மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஜோலார்பேட்டை பகுதியில் கூலித்தொழிலாளர்கள் ஊரடங்கால் வாழ்வாதரம் இழந்து நிற்பதையறிந்து அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், வாகனம் பழுது பார்ப்போர் போன்ற தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறார்.

முன்னதாக ஜோலர்பேட்டை பகுதியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், ஊராட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு தனது சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், முகக்கவசங்கள், கையுறைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி இருந்தார். தொடர்ந்து மக்களுக்கு உதவி வரும் கவிதா தண்டபாணி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் கே.சி வீரமணியிடம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.