withdraw the bus fare hike.staline warning to TN govt

இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுக சார்பில் சாலை மறியல் மற்றும் சிறை நரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. பொது மக்களிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் தற்போது பெரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைக்கு தி.மு.க. தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது, இந்த இயக்கம் இருந்தால் தங்களுடைய எண்ணங்களை, சதிகளை நிறைவேற்ற முடியாது என்று யார் யாரோ என்னென்னவோ சதிகளை எல்லாம் திட்டமிட்டு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சதி வலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்து நான் சொல்ல விரும்புவது, எப்படிப்பட்ட தீயசக்தியாக, எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும், யாராலும் இந்த திராவிட இயக்கத்தை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என அவர் சவால் விட்டார்..

தி.மு.க. இன்றைக்கு ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், விரைவில் ஆளும் கட்சியாகும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போது நான் எதிர்க்கட்சித் தலைவன். ஆட்சியின் தலைவராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், இரண்டையும் ஒன்றாகவே கருதி, இந்த நாட்டுக்காக உழைக்கும் உன்னதமான இயக்கம் தி.மு.க தான் என தெரிவித்தார்



திமுக மக்கள் ஏற்கும் வகையில், அவர்களால் தாங்கக்கூடிய அளவில் தான் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எப்படி நள்ளிரவில் உத்தரவிட்டாரோ, அதைவிடவும் கொடுமையாக இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் குதிரை பேர ஆட்சி இப்படி பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது என குற்றம்சாட்டினார்..

உடனடியாக பஸ் கட்டண உயர்வை நீங்கள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், 27-ந் தேதியோடு தி.மு.க.வின் போராட்டம் நின்றுவிடாது. அடுத்து, 28, 29 ஆகிய தினங்களில் மறியல் போராட்டமாக, சிறை நிரப்பும் போராட்டமாக நிச்சயம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்