நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தவுடன் அனைத்து கட்சிக் கூடாரங்களும் காலியாகிவிடும் என இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் அத்தனை கட்சிக் கூடாரமும் காலியாகிவிடும். வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்தான் வெற்றிபெறுவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தவே திருமாவளவன் இவ்வாறு செயல்பட்டு வருகிறார். இதற்கு தமிழக முதல்வர் தான் முடிவு கட்டவேண்டும்.

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெற்றுவருகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழுவை அமைத்துவருகிறோம். ஆன்மிக அரசியல் தான் வருகின்ற தேர்தலில் வெற்றிபெறும். திராவிட அரசியல் முடிவுக்கு வரும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தான் இருக்கிறார். தகுந்த நேரத்தில் கட்சியை அறிவிப்பார். வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் இணைய வேண்டிய அவசியம் ரஜினிகாந்துக்கு இல்லை. அவருக்கு என தனி செல்வாக்கு உள்ளது. ரஜினிகாந்த் வந்தால் அத்தனை கட்சிக் கூடாரங்களும் காலியாகிவிடும். அவர் தான் வெற்றிபெறுவார்’’ எனத் தெரிவித்துள்ளார்.