கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்தது. இதற்கு காற்றாலை மின் உற்பத்தி திடீரென குறைந்ததே காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்றும் அவர் உறுதி அளித்தார். ஆனாலும் கூட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது.

   வழக்கமாக செப்டம்பரில் காற்றாலை மின் உற்பத்தி முற்றிலுமாக நின்று போகும். அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் மூலமாகவே தமிழகத்தின் மின்தேவை செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பூர்த்தி செய்யப்படுவது வழக்கம். அதிலும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழக அரசு பணம் கொடுத்து வாங்கும்.

   ஆனால் தற்போது வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்திருப்பதால் தமிழகத்திற்கு அங்கிருந்து மின்சாரம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. மேலும் தமிழகத்திலும் காற்றாலை மின் உற்பத்தி முற்றிலுமாக தற்போது நின்றுவிட்டது. இதனால் முழுக்க முழுக்க அனல் மின் நிலையத்தை சார்ந்தே தமிழகத்தின் மின்தேவை இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அனல் மின் நிலையங்கள் இயங்க வேண்டும் என்றால் நிலக்கரி அவசியம்.

   தமிழகத்திற்கு மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் அங்கு பெய்த மழை காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிலக்கரி வரவில்லை. இப்படி வெளிமாநிலங்களில் இருந்து நிலக்கரி வர முடியாத சூழலில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம்.

   ஆனால் நத்தம் விஸ்வநாதன் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது. இதனால் மீண்டும் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு தயங்கி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

   20 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கைவசம் இருந்தால் மட்டுமே அனல் மின் நிலையங்களில் தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நிலக்கரி குறைய குறைய வாய்ப்புள்ள இடங்களில் இருந்து நிலக்கரியை மின்சாரத்துறை கொள்முதல் செய்து கொண்டே இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக நிலக்கரி வேகமாக குறைந்து வந்த நிலையிலும் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுவில்லை.

   இதனால் தற்போது அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையில் இருப்பு உள்ளது. இந்த மூன்று நாட்களுக்குள் தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை என்றால் அடுத்த நாள் முதல் தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை உருவாகும். மேலும் தமிழகத்தில் மிகத் தீவிரமான மின்சார பற்றாக்குறை ஏற்படும். ஏனென்றால் காற்றாலை மின் உற்பத்தி நின்றுவிட்டது. அனல் மின் நிலையங்களும் இயங்கவில்லை என்றால் அணு மின் நிலையங்கள் மட்டுமே இருக்கும்.

   அணு மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையானமின்சாரம் ஒட்டு மொத்தமாக கிடைக்காது. இதனால் தமிழகத்திற்கு நிலக்கரி வந்து சேரவில்லை என்றால் தமிழகத்தின் நிலை அதே கதிதான் என்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

  மேலும் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்திற்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மிக குறைந்த காலகட்டத்தில் தேவையான நிலக்கரி தமிழகத்திற்கு வரவில்லை என்றால் இருள் சூழ்ந்த தமிழகத்தை சந்திக்க நாமும தயாராக வேண்டியது தான்.