தமிழக சட்ட அமைச்சராக உள்ள சி.வசண்முகம், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கனின் விடுதலைக்கு கடந்த ஓராண்டு காலமாகவே கடுமையாக பின்புல வேலைகளைச் செய்து அவர்கள் வெளியே வர கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

திண்டிவனத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி.யான வேணுகோபாலின் மகனாவார். இவர், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 4-வது முறையாக எம்.எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சட்டத்துறையோடு சேர்ந்து கனிம வளங்கள் துறையும் அவருக்கு கூடுதலாக அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் வேண்டுகோள்... பேரறிவாளனின் தாயாரின் தொடர் வேண்டுகோள் ஆகியவற்றோடு சேர்த்து அடிப்படையில் தமிழ் உணர்வாளரான சி.வி.சண்முகம், 7 தமிழர்களின் விடுதலைக்காக கடந்த ஓராண்டு காலமாகவே சரியான திட்டமிடலோடு சட்ட ஆலோசனைகள் பெற்று முயற்சிகளை மேற்கொணடு வந்தார்.

உச்சநீதிமன்றத்தால், விடுதலை மறுக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது சட்ட ரீதியாக சாதாரண விஷயமல்ல. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே இவர்களை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தடைகள் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால், கடைசி வரை அவர்களை வெளிக்கொணர முடியவில்லை.  காரணம், மத்திய அரசை பொறுத்தவரை சிபிசி 432-ன்படி வழக்கு விசாரிக்கும்போது தண்டனைக் கைதிகள் மத்திய அரசின் ஒப்புதலோடு விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

அதேபோன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவமும் தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகளாக மாற்றிய பிறகும் 432-ன்கீழ் இவர்களை விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தார். நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 432-ன் பிரிவின்கீழ் விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டார்.

அதன்பிறகு, தொடர்ந்து பல சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இவற்றை எல்லாம் முறியடிக்கும் விதத்தில் தற்போதைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இதனை தனது சொந்த வழக்குபோல் கருதி தொடர்ந்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதேபோல் உச்சநீதிமன்றத்தின் சட்டக் கூறுகளை ஆராய்வதற்காக வல்லுநர் குழு அமைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தொடர் முயற்சி காரணமாகவே அரசியல் சாரசம் 161-ன்கீழ் மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அமைச்சரவை, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. 27 ஆண்டுகால போராட்டத்துக்கு அடுத்து இவர்களை விடுதலை செய்ய தற்போது பெரும் காரணமாக இருந்தவர் சி.வி.சண்முகம்தான். அதனால் இவர் சூப்பர் ஹீரோதானே.