துபாய் தொழில் கண்காட்சி 31.03.2022 அன்று முடிய இருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாக அங்கே தமிழக அரங்கை திறப்பதால் என்ன பயன்? எத்தனை பேர் அதைப் பார்க்க முடியும் என்ற என் கேள்விக்கு பதில் இல்லை.
தொட்டம்பட்டி அண்ணாமலை கோபாலபுரத்தை எதிர்க்கும் போது, ஆதாரங்கள் இல்லாமல் செய்ய மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது சர்ச்சையானது. இதுதொடர்பாக திமுக - பாஜக இடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக அண்ணாமலை பாஜக பத்திரிகையான ‘ஒரே நாடு’ இதழில் அக்கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இன்று நான் இரண்டு முக்கியமான விஷயங்களை எடுத்துரைக்கிறேன். முதலில் முதல்வரின் துபாய் பயணம் பற்றியும் அடுத்ததாக BGR எனர்ஜி மின் வாரிய ஊழல் குறித்த புதிய ஆவணங்களையும் வெளியிட இருக்கிறேன்.
முதல்வரின் துபாய் பயணம்

மார்ச் 26 - 29 தேதியிட்ட நக்கீரன் இதழில் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது கடந்த ஐந்து மாதங்களில் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை அரேபிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து பெருந்தொகை வெளியேறியுள்ளது என்று அந்த செய்தி தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. 27-03-2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் தமிழக ஆளுநர் குறித்த செய்தியில் அவர் தமிழக அரசின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக செய்தி குறிப்பு வருகிறது. அந்தச் செய்தியில் சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி கடல் கடந்து அரேபிய நாடுகளுக்கு சென்றுள்ளதை ஒரு தனி செய்தியாக வெளியிட்டு இருக்கிறார்கள். பிப்ரவரி 2ஆம் தேதி Falcon Aviation என்ற தனியார் விமான நிறுவனம், சென்னையிலிருந்து துபாய் அல்மக்தும் விமான நிலையம் சென்ற பயணிகள் பட்டியல் படி பயணிகள் உதயநிதி, ஆகாஷ், ரிதேஷ், சபரீசன், கார்த்திகேயன், ஆடிட்டர் சண்முகராஜ், விஜய், வின்சென்ட், அபிராம் ரெட்டி ஆகியோர் பயணித்துள்ளனர்.
முதல்வருக்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி மாதமே முதல்வரின் மருமகன் சபரீசன் துபாயில் தொழிலதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அவர் லூலூ-மால் அதிபர் யூசுப் அலியைச் சந்தித்து பேசிய படங்களை வெளியிடுகிறேன். இது குறித்து நான் விருதுநகரில் பேசியபோது, ‘ஜூனியர் விகடன் நாளிதழில் வெளிவந்த அதே செய்தியை 5,000 கோடி ரூபாய் அரேபிய நாட்டில் முதலீட்டுக்காக வெளியே சென்றிருக்கிறது. ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கும் துபாய் தொழில் கண்காட்சியில், எதற்காக அவசர அவசரமாக தமிழக அரசு ஓர் அரங்கம் அமைக்க வேண்டும். இத்தனை செலவுகள் செய்து திறக்கும் தமிழக அரங்கு, எதற்காக இரண்டு மூன்று நாட்களில் மூடப்பட வேண்டும்? அதாவது தவறு செய்வதற்கு ஒரு அலிபி வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்ட காரணம்தான் இந்த திறப்பு விழா என்று பேசியிருந்தேன்.
வழி நடத்திய சபரீசன்

அதேபோல சென்னையில் பட்ஜெட் எதிர்ப்பு போராட்டத்தில், ‘ துபாய்க்கு நிறைய நிதிகள் போறாங்க, கோபாலபுரத்து நிதிகள் துபாய் சென்றிருக்கின்றன’ என்று பேசியிருந்தேன். தமிழக அரசின் ஆவணத்தின்படி முதல்வரின் இந்தப் பயணத்தில் திரட்டப்பட்ட முதலீடுப் பணம் 6,500 கோடி ரூபாய். இதில் கேரளாவை சேர்ந்த யூசுப் அலி, அசாத் மூப்பன் செய்யும் முதலீடு மட்டும் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய். இவர்களிடம்தான் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி சபரீசன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி முதலீட்டுக்கான ஏற்பாடுகளை வழி நடத்தியிருக்கிறார். இதைச் சொன்னதற்காக எனக்கு ரூ. 100 கோடி கேட்டு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இதுபோன்ற மிரட்டலுக்கு எல்லாம் பாரதிய ஜனதா கட்சி அஞ்சாது. நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் இந்த அவதூறு வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
இது மட்டுமில்லாமல் அதிமுக அமைச்சர்களை எல்லாம் மிரட்டி பிளாக் மெயில் செய்து நான் பணம் பறிப்பதாக ஒரு கற்பனை குற்றச்சாட்டை ஆர்.எஸ்.பாரதி என்மீது சுமத்தி இருக்கிறார். தன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஆர்.எஸ். பாரதி சவாலை நான் ஏற்கிறேன். உங்களைப்போல கோழைத்தனமாக கோடிக்கணக்கில் அவதூறு வழக்குப் போட்டு நோட்டீஸ் அனுப்ப மாட்டேன். உங்களிடம் அரசு இருக்கிறது. ஆட்சி இருக்கிறது. காவல்துறை இருக்கிறது. பிறகு ஏன் என்னை கைது செய்ய தயங்குகிறீர்கள்? உங்களுக்கு 6 மணிநேரம் தவணை தருகிறேன். தைரியமிருந்தால், உங்கள் பேச்சில் உண்மை இருந்தால், உங்களிடம் ஆதாரம் இருந்தால், என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம். நான் என் அலுவலகத்தில் தயாராக இருக்கிறேன். இன்னும் ஆறு மணி நேரம் என் அலுவலகத்தில் உங்களுக்காக காத்திருக்கிறேன்,. முடிந்தால் கைது செய்யுங்கள். இல்லையேல், உங்கள் பேச்சிலே உண்மை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். .ஆர்.எஸ்.பாரதி அவர்களே உங்களைப்போல தலைமைக்கும் தலைமையின் குடும்பத்திற்கும் கப்பம் செலுத்தி பதவியைப் பெற்றுக் கொண்டு கட்சியில் இருப்பவர்கள் நாங்கள் இல்லை.
மொத்தமா அனுப்புங்க

ஆறு மணி நேரம் உங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறேன். முடிந்தால் என்னைத் தொட்டுப் பாருங்கள். BGR எனர்ஜி நிறுவனத்திற்காக ஒரு 500 கோடி. முதல்வரின் துபாய் பயணத்திற்காக ஒரு நூறு கோடி. மற்றும், இது இல்லாமல் ஒரு பத்து கோடி என்று என் மீது 610 கோடி ரூபாய் அளவிற்கு அவதூறு வழக்கை போட்டிருக்கும் திமுக அரசுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். இந்த அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்ல. ஆடு மாடுகள் மேய்க்கும் ஒரு சாமானிய விவசாயிக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம். ஆனால், சட்டத்தின் மீதும், மக்களின் மீதும் நம்பிக்கை வைத்துப் போராட நான் தயார். ஒரு வீடியோ ஆதாரம் சிக்கி இருப்பதாக கூறிய போது உடனே சன் டிவியில் வெளியிடுங்கள் என்று கூறியிருந்தேன். ஆனால், ஒன்றும் வரவில்லை. இப்போது மிரட்டி பணம் பறிப்பதாக கூறுகிறார்கள். கைதுக்குத் தயாராக இருக்கிறேன், ஆதாரத்துடன் வாருங்கள்.
இது போன்ற நோட்டீஸ் எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை, உண்மையாகவும் நேர்மையாகவும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நான் தெரிவிக்கும் கருத்துக்களுக்காக நீங்கள் ஆயிரம் நோட்டீஸ் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னை மிரட்டி பார்க்க நினைக்காதீர்கள். தொட்டம்பட்டி அண்ணாமலை கோபாலபுரத்தை எதிர்க்கும் போது, ஆதாரங்கள் இல்லாமல் செய்ய மாட்டேன். ஆர்.எஸ். பாரதி அடிப்படை சட்ட அறிவு கூட இல்லை. மு.ஸ்டாலின் முதல்வராக சென்று இருக்கிறார். அரசு அதிகாரிகளுடன் சென்றிருக்கிறார் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் பேட்டி கொடுக்கிறார். அரசுக்காக கட்சிக்காரர் ஆர் எஸ் பாரதி எப்படிப் பேசுகிறார். அரசுப்பொறுப்பில் இல்லாத அவர், சிஆர்பிசி சட்டப்பிரிவு 490, 499 ஆகிய ஷரத்துக்களின் படி என் மீது வழக்குப் போட தகுதியை இழக்கிறார். அருகில் இருக்கும் வில்சன் 10 கோடி ரூபாய்க்கு தனியாக ஒரு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்புகிறார். அனுப்புங்க சார் அனுப்புங்க… மொத்தமா பாத்துக்குறேன்.
அடுத்து BGR நிறுவனம்
இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கும் ஆவணம், தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் போர்ட் ரெசல்யூசன். 27.4.2021 அன்று தமிழக மின்வாரியத்தின் கமிட்டி மீட்டிங் நடைபெற்றது. எண்ணூர் துறைமுக பொறுப்புக் கழகத்தின், புதிய கட்டுமான டெண்டர் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் கட்டமைப்பு என்றும் இதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை விட சூரிய சக்திக்கான செலவு மிச்சமாகும் என்றும் ஆகையால் இந்த BGR நிறுவன டெண்டர் அவசியம் இல்லை என்றும் முடிவு செய்யப்படுகிறது. மின் வாரியத்தின் அதிகாரம் பெற்ற அமைப்பு இந்த டெண்டரை கேன்சல் செய்வதாக தெரிவித்த பிறகும், நட்டம் வரும் என்று தெரிவிக்கப்பட்ட ஒரு டெண்டரை நடத்தி, ஆளும் கட்சியினர் தலையிட்டு, பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு டெண்டரை சாதகமாக்க காரணம் என்ன?

டெண்டர் கிடைத்த பின்னும் 14 மாதங்களாக, பர்ஃபாமென்ஸ் கேரண்டி பாதுகாப்பு முன் வைப்புத் தொகையை BGR எனர்ஜி நிறுவனம் கட்டவில்லை. கட்ட வேண்டும் என்று அவர்களுக்குக் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்ட போது மேற்கிந்திய தீவுகளில் இருந்து செயின்ட் லூயிஸ் வங்கி இவர்களுக்கான கேரண்டியைக் கொடுக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த டெண்டர் கண்டிஷன்படி இந்தியாவில் உள்ள ஷெட்யூல்டு வங்கிகளில் மட்டும்தான் கேரண்டி தர முடியும். இந்தியாவிலேயே பணமில்லாத இந்த BGR எனர்ஜி நிறுவனத்திற்கு மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து பணம் எப்படி வருகிறது?
4422 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை பெறுவதற்கு காரணமாக உள்ள நபர்களை முதல்வரின் குடும்பத்தினர் சென்று சந்திக்கிறார்கள் என்றால் எவருக்கும் சந்தேகம் வரும். இத்தனை பெரிய நிதி முதலீட்டை திரட்டுவதற்காக வெளிநாட்டு பயணம் செல்லும் தமிழக முதல்வர், மாநில நிதி அமைச்சரை ஏன் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை?
காத்துக்கொண்டிருக்கும் அண்ணாமலை
துபாய் தொழில் கண்காட்சி 31.03.2022 அன்று முடிய இருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாக அங்கே தமிழக அரங்கை திறப்பதால் என்ன பயன்? எத்தனை பேர் அதைப் பார்க்க முடியும் என்ற என் கேள்விக்கு பதில் இல்லை. அதேபோல என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தால் உங்களுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆதாரத்துடன் வந்து என்னை கைது செய்யுங்கள். இல்லையேல் இன்று ( நேற்று) மாலை முதல் உள்நோக்கம் கொண்ட உங்கள் பேச்சுக்கள் எல்லாம் பொய் என்பதை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
