Will Vetrivel be arrested? Court adjourned till Jan 3

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வீடியோ வெளியிட்டது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலின் மனு வரும் ஜனவரி 3 ஆம் தேதி அன்று உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

உடல்நலக்குறைவு காரணாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள், அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது தொடர்பான வீடியோ அல்லது போட்டோவை வெளியிட எதிர்கட்சி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறி வந்தனர். எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணை அமைத்தது. இது தொடர்பான விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் அன்று, டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். வெற்றிவேலின் இந்த நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், வெற்றிவேல் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்க தொடுத்தார். அதன் பேரில், அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

ஜெயலலிதா தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சென்னை, உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் முன்ஜாமின் கோரி மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடத்த உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.