மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்பு மனுவை ஏற்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் 3 பேர்; அதிமுக சார்பில் 3 பேர் என 6 பேர் மட்டுமே போட்டியிட்டால், அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிடுவார்கள். திமுக சார்பில் ஓரிடம் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தை இடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். வைகோ வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தேச துரோக வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.


இந்த வழக்கில் ஓராண்டு சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வைகோவுக்கு விதிக்கப்பட்டது. ஓராண்டு மட்டுமே தண்டனை பெற்றதால், அவர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால், தேச துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால், அவருடைய வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்காமல் நிராகரிக்கலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட தகவல்களை கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது. இதில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது, வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பதுதான். இதுபற்றி தேர்தல் அதிகாரி சீனிவாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இதையத்து மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அவசரமாக கடிதம் எழுதி விளக்கம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வழங்கும் அறிவுரையைப் பொறுத்தே வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.


இதுபற்றி வைகோ ஏற்கனவே கருத்து தெரிவிக்கும்போது, “ நான் தண்டனை பெற்றது மாநிலங்களவைக்கு செல்வதில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது 9-ம் தேதி நடக்கும் வேட்புமனு பரிசீலனையின் போதுதான் தெரியும்” என்று கூறியிருந்தார். வைகோ 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாநிலங்களவைக்கு செல்வாரா, இல்லையா என்பது தேர்தல் ஆணையத்தின் பதிலை பொறுத்தே உள்ளது.