சில நாட்களுக்கு முன்பு  காஷ்மீர் விவகாரத்தில் வைகோவுடன் வார்த்தை போர் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி,  நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வைகோவுக்கு அழைப்புவிடுத்த தகவல் வெளியாகி உள்ளது.


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுவது என்று முடிவானது. இடைத்தேர்தல் ஆதரவு குறித்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அறிக்கை மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதை உறுதி செய்தன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இரு கட்சிகளுக்கும் மதிமுக ஆதரவை தெரிவித்தார்.
அதற்கு முன்பாகத்தான் காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய வைகோ,  “காங்கிரஸ்காரர்கள் துரோகிகள்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, “வைகோ காங்கிரஸ் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராகி, நன்றி மறந்து பேசுகிறார்” என்று பதிலடி கொடுத்தார். இதற்கும் பதில் கூறிய வைகோ, “நான் திமுக எம்.எல்.ஏ.க்கள் மூலமே மாநிலங்களவை உறுப்பினராகி இருக்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் அல்ல” என்று வார்த்தைப் போர் நீண்டது.
இதுபோன்ற இரு கட்சிகளும் வார்த்தை யுத்தம் நடத்திய நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று வைகோ கூறியதை மதிமுக தொண்டர்களே அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், நாங்குநேரி தேர்தலில் காங்கிரஸை வைகோ ஆதரிக்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி போட்ட போன் காலே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருநெல்வேலியில் மதிமுகவுக்கு சற்று வாக்கு வங்கி இருப்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே வைகோவுக்கு போன் செய்த அழகிரி, மதிமுகவின் ஆதரவை கோரியிருக்கிறார். அதன்பிறகே வைகோ ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்றாலும் நாங்குநேரியில் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு வைகோ வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கே.எஸ். அழகிரி, “காங்கிரஸ் அழைக்கும் தேதியில் பிரசாரத்துக்கு வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். எங்களுக்கும் அவருக்கும் இப்போது எந்த மன வருத்தமும் இல்லை. நல்ல நட்புடனும் தோழமையுடன் வைகோவுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.