கர்நாடக சட்டப்பேரவையில் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பால் பாஜக படு அப்செட் ஆகியுள்ளது. 
 கர்நாடக குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் 15பேரால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறிஅ சட்டப்பேரவையில் குமாரசாமி நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தின் மீது இரு நாட்கள் விவாதம் நடந்தும் ஓட்டெடுப்பு நடைபெறவில்லை. கர்நாடக ஆளுநர் ஓட்டெடுப்பு நடத்த இருமுறை உத்தரவிட்டும் குமாரசாமி மசியவில்லை. மேலும் ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை, இன்று மீண்டும் கூடுகிறது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா இல்லையா என்று தெரியாத நிலை இருந்தது. ஆனால், இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் திணேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் பேசினார். 
அப்போது அவர் “மாநில சட்டப்பேரவையில் நாளை (இன்று)நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்பப்பில்லை. கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் உரிய விளக்கம் தந்த பிறகே ஓட்டெடுப்பு குறித்து ஆலோசிப்போம்.” என்று தெரிவித்தார்.


 மாநில காங்கிரஸ் தலைவரின் இந்தப் பேட்டியால் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்றே தெரிகிறது. இதனால், பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இன்றோடு குமாரசாமி நடையைக் கட்டுவார் என்று எடியூரப்பா கூறியிருந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பரமபதம் விளையாட்டு நடைபெறுவதால், பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகத்தில் அரசியல் சட்டம் மீறப்படுவதாக கூறி மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் வஜூவாலா அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.