போராட்டத்தில் என்னை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு திராணி இல்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில், ’திருமாவளவனின் கருத்தை கண்டித்து சிதம்பரத்துக்கே சென்று நான் போராட்டம் நடத்தினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் நினைத்தனர். எனவேதான் என்னை தடுத்து நிறுத்தினார்கள். என்னை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு திராணி இல்லை. என்னை கண்டு பயந்து விட்டனர். எனவேதான் எங்களது போராட்டத்தை திட்டமிட்டு சீர் குலைத்தனர்.

பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக திருமாவளவன் சொல்லும் மனு தர்ம நூல் சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதன் பிறகு அதனுடைய சாரம்சங்களை நிறைய பேர் எழுதியுள்ளனர். தங்களது விருப்பத்துக்கு ஏற்பகூட அது மாற்றி எழுதப்பட்டிருக்கலாம். தற்போது டாக்டர் அம்பேத்கார் எழுதிய சட்டத்தின்படிதான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே தற்போதைய ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவது சரியல்ல. பழைய மனு தர்ம நூலில் பெண்களுக்கு எதிராக எழுதப்பட்டிருப்பதாக சில வரிகளை சொல்கிறார்கள்.

அந்த வரிகளை பிடித்து கொண்டு அரசியல் செய்வதால் என்ன சாதனை படைத்து விட முடியும். அந்த வரிகள் மூலம் நீங்கள் எதை நிரூபித்து காட்ட முடியும். தேர்தல் வருவதால் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக மட்டுமே விடுதலை சிறுத்தைகள் இப்படி செயல்படுகிறார்கள். பெண்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் அடுத்த நிமிடமே அனைவரும் உங்களுக்கு மரியாதை கொடுக்க தொடங்கி விடுவார்கள். நீங்கள் பா.ஜனதாவை இழிவுபடுத்தவில்லை. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் இழிவுபடுத்தி உள்ளீர்கள்.

உண்மையில் மனு தர்ம புத்தகத்தில் பெண்களை புகழ்ந்துதான் சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று அந்த புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமாவளவன் இதையெல்லாம் சொல்லாமல் தேவையில்லாததை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.