தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடர்பாக 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த மார்ச் 23ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது அமலில் உள்ள 7ம் கட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே, மாவட்டங்களுக்கு இடையேவும், மாநிலத்துக்கு இடையேவும்  பயணிப்பதற்குத் தமிழக அரசு இ பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியது.இறப்பு, திருமணம் உள்ளிட்ட அவசர காரணங்களுக்காகச் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனினும் உறவினர் மரணம்,  உடல்நிலை பாதிப்பு போன்ற அவசர காரணங்களுக்காக விண்ணப்பித்தாலும் எளிதில் பாஸ் கிடைப்பதில்லை என்று மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில் ஆகஸ்ட் 1ம் தேதி மத்திய அரசு இ பாஸ் நடை முறையைக் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. எனினும் தமிழகத்தில் இ பாஸ் முறை நடைமுறையிலிருந்து வந்த நிலையில், இதனைப் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனவே, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும்,  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் வழங்கப்படும்  இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அதிரடியாக கடிதம் எழுதினார். 

இதனையடுத்து, மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது.  இந்த சூழலில் தமிழகத்திலும் இந்த முறையை ரத்து செய்வது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? என்பது பற்றி முடிவெடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆகஸ்ட் 29ம் தேதி விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.