செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுமா.? தடுப்பூசி நிறுவனத்துக்கு விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்.!
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுக்கூடம் தொடங்குவதற்கான முயற்சிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவன வளாகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் இந்த நிறுவனத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுக்கூடத்தினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் நிறுவனமான ஹெச்.எல்.எல். பயோடெக் லிமிடெட் நிறுவனத்திற்கு உற்பத்தியைத் தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.