முதல்வர் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார். ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கிறார். அதிமுக அரசு மீது பழி போடுகிறார். அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அடுத்தநாள் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்த இடங்களை நேரில் சென்று பார்த்தால் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், துறை அமைச்சரான செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்வாரா முதல்வர் ஸ்டாலின் என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் திடீரென சுமார் 10 மணிநேரத்திற்கு இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி பெரியார் நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை, 100 சாலை என நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய சில இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதே நிலைதான் சென்னை புறநகர் பகுதியில் காணப்பட்டது.

இந்நிலையில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதேபோல், ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலையில் வசித்து வந்தவர் மூதாட்டி தமிழரசி. பலத்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அதில் நடந்து சென்ற மூதாட்டி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மீனா(45). புளியந்தோப்பில் உள்ள அம்மையம்மாள் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.அந்த பகுதியில் மழை சற்று ஓய்ந்த நிலையில் கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் அப்போது வீட்டின் இரும்பு கேட்டை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இது சென்னை மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். வடகிழக்கு பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைத்து இருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருக்கும் யோசனைகளை இந்த எட்டு மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட இந்த மூன்று உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின் வடங்களிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகச் சொன்ன இன்றைய முதல்வர் தற்போது இந்த அரசின் மின்சாரத் துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், முதல்வர் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார். ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கிறார். அதிமுக அரசு மீது பழி போடுகிறார். அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அடுத்தநாள் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்த இடங்களை நேரில் சென்று பார்த்தால் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எங்கள் இடங்களுக்கு துறை அமைச்சர்கள் யாருமே நேரில் வந்து பார்வையிட வில்லை என்றும் முதல்வர் பார்வையிட்டுச் சென்றவுடன் நிவாரண உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விடுகிறது என்றும் ஊடகங்களில் கூறுவதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
