அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுக்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் எடப்பாடி  பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக முதலமைச்சர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமைகளே முடிவு செய்வார் எனவும், எடப்பாடியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறிவருகிறது. 

 

இந்நிலையில் அதிமுகவும் பாஜகவும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழ் மாநில தலைவர் எல். முருகன் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேசிய தலைமையே முடிவு செய்யும் என மீண்டும் கூறியுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7.5% மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தான் ஆளுநரை சந்தித்தோம். ஆளுநரின் சந்திப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்தது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

ஆளுநரின் முடிவுக்கு பின் அரசு நடவடிக்கை எடுக்கும், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கழகக் கூட்டணி பலமாக உள்ளது. திமுக கூட்டணி பலவீனமாக இருப்பதால்தான் அவ்வப்போது ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர். தேர்தலை சந்தித்து கழகம் நிச்சயம் வெற்றி பெறும், ஆனால் அந்த நம்பிக்கை திமுகவுக்கு இல்லை என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் எல். முருகன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர்,  நமது முதலமைச்சர் அதிமுக கழகத்திற்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றார். கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். ஆனால் அதற்குத் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழி என்றார். 

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்றார். அதேபோல் விஜய் சேதுபதி மகளை விமர்சனம் செய்பவர்கள் மனித ஜென்மம் மற்றவர்கள், அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை சைபர் கிரைமில் புகார் அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.