வேலூரில் தேர்தல் ரத்தா..? பீதியால் பிரசாரத்தை நிறுத்தும் வேட்பாளர்கள்!
வேலுார் ரெய்டில் சிக்கிய பணத்தை அடுத்து அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருப்பதால். வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற அச்சத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.
வேலூரில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், அமமும் சார்பில் பாண்டுரங்கனும் களம் இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் வேலூரில் நடந்த ஐ.டி. ரெய்டில் கட்டுக்கட்டாக 11.53 கோடி ரூபாய் சிக்கியது. வேலூரில் வார்டுகள் வாரியாக வினியோகிக்க அந்தப் பணத்தைப் பிரித்து வைத்திருந்ததால், வாக்காளர்களுக்கு தருவதற்கான பணம் என்பது உறுதியானது.
பிடிப்பட்ட தொகை குறித்து வருமான வரித்துறை விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியிருக்கிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பணப் புழக்கம் அதிகமாக இருந்த தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல 2017-ல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது வேலூரில் பணம் பிடிப்பட்டதால், இத்தொகுதியின் தேர்தலும், இந்தத் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலை ரத்து செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டுவருவதாக திமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வைத்துவருகிறது. தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனே, தேர்தல் ரத்து என்ற செய்தி வேலூரில் வேட்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அமமுக, மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டனர். பூத் சிலிப் தயாரிப்பிலும் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்புக்காக வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.