வேளாண் சட்ட விவகாரத்தில் இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் வெளியிட்டுள்ள நாராயணன்;- மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது மத்திய பாஜக அரசு. இனிமேல் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அவர்கள் நினைக்கிற விலைக்கு விற்க முடியாது. உழவர் சந்தைகள் இனி கிடையாது. அது தனியாருக்கு போக போகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு போக போகிறது. அதானிக்கு குழுமத்திற்கு போகப்போகிறது. நாம் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து செய்கிற விவசாயத்தால் நாம் பலன் பெற முடியாது" என்று கடலூரில் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். 

அரசியல் லாபத்திற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்கள் மத்தியில் தி மு க தலைவர் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயம் குறித்தோ, வேளாண் சட்டங்கள் குறித்தோ அடிப்படை புரிதல் சிறிதும்  இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல். விவசாயம் செய்யமுடியாது அல்லது கூடாது என்று வேளாண் சட்டங்களில் எங்கும் சொல்லப்படவில்லை. குறைந்த பட்ச ஆதார விலைக்கு விற்காத விளை பொருட்களை , விவசாயிகள் நினைக்கிற விலைக்கே விற்பதற்கு தான் ஒப்பந்த சட்டம் வந்துள்ளது என்பதே உண்மை. இதுநாள் வரை விவசாயிகள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து செய்த விவசாயத்தால் அரசியல் இடைத்தரகர்களே பயன்பெற்று வந்த நிலை மாறி இனி விவசாயிகளுக்கு நேரடியாக அதிக லாபமீட்ட முடியும் என்பதாலேயே வேளாண் சட்ட திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. 

உழவர்கள், சந்தைக்கு சென்று கொண்டிருந்த நிலை மாறி, சந்தையே உழவர்களை தேடி வர செய்யும் புதிய சட்டங்களே  இவை. இது நாள் வரை, தேவை இருந்தும் உற்பத்தியான விலை பொருட்களை விற்க முடியாத சூழ்நிலையில், அதாவது அதிக விளைச்சல் ஏற்பட்டபோதெல்லாம் அதே சந்தையில் நட்டத்தில் மட்டுமே விற்று கொண்டிருந்த நிலையில், புதிய சட்டங்கள், விவசாயிகளின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கும். வேளாண் துறையில் தனியார் நிறுவனங்கள், வேளாண் கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதலில் தங்களின் முதலீட்டை பெருக்குவதன் மூலம், அதிக விளைச்சல் ஏற்பட்டாலும், விளைபொருட்கள் சேதமாகாமல்,  பாதுகாக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

28/06/2005 அன்று தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு  அதானி குழுமத்துடன் விவசாய விளை பொருள் சேமிப்பு கிடங்குகளை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டதையும், 2007ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கான பல்வேறு சலுகைகளோடு அளித்ததையும், அவை இன்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்  செயல்பட்டு கொண்டிருப்பதையும் உங்களால் மறுக்க முடியுமா ஸ்டாலின் அவர்களே? அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் என்பதை மறந்து விட்டீர்களா ஸ்டாலின் அவர்களே? ஏன்? அப்போது அதானி குழுமம் கார்ப்பரேட் என்பது உங்களுக்கு தெரியாதா ? அப்படி தெரியுமென்றால் உங்கள் ஆட்சி காலத்தில் நீங்கள் கூறிய  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து உங்கள் வருமானத்தை பெருக்கிக்கொண்டு, விவசாயிகளை வஞ்சித்தீர்கள் என்று ஒப்பு கொள்கிறீர்களா? 

அப்படி ஒப்பு கொள்வதாக இருந்தால் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? சாதாரண சிறு குறு விவசாயிகள் பயனடைந்தால், இடைத்தரகர்களும், அரசியல் வியாபாரிகளும் தங்களின் வருமானத்தை இழந்து விடுவார்கள் என்பதனால் தான் ஸ்டாலின் அவர்கள், யாரோ சில இடைத்தரகர்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் பேசுகிறார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். ஸ்டாலின் அவர்களே உண்மையை மட்டுமே உரையுங்கள். சத்தியமே வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.