தன்னால் அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று ரஜினி இன்று அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பற்றி செய்தித் தொலைக்காட்சிக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரஜினி தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதை விமர்சிக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை. ரஜினியின் அறிவிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சியை தரும் என்பது திருமாவளவன் கூறியுள்ளார். உண்மையில் அதிர்ச்சிக்கு ஆளானது திமுக கூட்டணியினர்தான். அதனால் அவர்களுக்கு சிறு திருப்தி ஏற்பட்டிருக்கும். பாஜகவை பொருத்தவரை, ரஜினி கட்சி ஆரம்பிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ரஜினி தன்னுடைய உடல்நிலையை கருத்தில்கொண்டு அறிவிப்பு செய்திருப்பது அவருடைய விருப்பம். இதை விமர்சிக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை. ஆன்மிக அரசியல் என்பது ஒரு சமுதாயத்துக்கு நல்லது. ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளை தனி மனிதனுடைய முடிவுகளை நம்பி ஆன்மிக அரசியல் இருக்க முடியாது. ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை ஆதரித்தது, அதற்கு மிகப்பெரிய வலுவை சேர்த்தது. இதை யாரும் மறுக்க முடியாது. அதே வேளையில் ரஜினி ஓர் இயக்கத்தை ஆரம்பிக்காததால் ஆன்மிக அரசியல் தோற்றுவிடும் என்று சொல்வதும் தோற்றுப் போய்விடும் என்று எதிர்பார்ப்பதும் அறிவுடைமை அல்ல.” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.