ராஜிவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த கேல் ரத்னா விருதை மாற்றி வேறொருவர் பெயரில் மோடி அறிவித்திருப்பது பிரதமர் மோடியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

விளையாட்டு வீரர்களுக்கு மிக உயரிய விருதாக ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது கடந்த 1991-92-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக விளங்கி, கணினித் துறையில் புரட்சிக்கு வித்திட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெருமையை போற்றுகிற வகையில் ராஜிவ்காந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. உலகமே வியக்கும் வகையில் ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லி 1982-ல் நடத்திய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு.
60 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு. அந்த காலக்கட்டத்தில்தான் தலைநகர் டெல்லியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதற்காக ராஜிவ்காந்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்தப் பின்னணியில்தான் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது. ராஜிவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை மாற்றி வேறொருவர் பெயரில் மோடி அறிவித்திருப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். கடந்த கால ஆட்சித் தலைவர்களின் பெயர்களை மாற்றிக் கொண்டே போனால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கிற பெயரை வருகிற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு மோடியின் நடவடிக்கை காரணமாக அமைவது மிகுந்த துரதிருஷ்டவசமாகும். இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கை கைவிட்டு, வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து நாட்டை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மோடி முன்வர வேண்டும். எனவே, இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அறிவிப்பை மோடி திரும்பப் பெற்று, மீண்டும் பாரத ரத்னா ராஜிவ்காந்தியின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred