நவம்பரில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஜினி பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இலவு காத்த கிளி, இலவு காத்த கிளி என்று ஒரு கதை உண்டு. அந்த கதையில் வரும் இலவு காத்த கிளிக்கு நல்ல உதாரணம் யார் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான். 1980களிலேயே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் 1989ல் வெளியான ராஜாதி ராஜா படத்திலேயே தனக்கு கட்சியும் வேண்டாம், ஒரு பதவியும் வேண்டாம் என்று பாடலாகவே பாடியிருப்பார் ரஜினி. ஆனாலும் கூட ஜெயலலிதாவுடனான மோதல் ரஜினியை அரசியல் பாதைக்கு இழுத்து வந்தது.

1996 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுக்க அந்த தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. அப்போது முதலே தேர்தலுக்கு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் என்ன என்கிற எதிர்பார்ப்பு எழும். ஆனால் ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பித்து வந்தவர், ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பிறகு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதுநாள் வரை இலவு காத்த கிளியாக இருந்த ரஜினி ரசிகர்கள் துள்ளிக் குதித்து களம் இறங்கினர். ரசிகர் மன்றம் பலப்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து பேசினார். திமுக, அதிமுகவிற்கு இணையாக கிராமங்களில் கூட ரசிகர்மன்றங்கள் புத்துயிர் பெற்றன. ரஜினி ரசிகர்கள் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் கனவில் மிதக்க ஆரம்பித்தனர். மேலும் ரஜினி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடியது. அவர் பேசுவது எல்லாம் தலைப்புச் செய்திகளானது. திமுக தனக்கு போட்டியாளராக ரஜினியை கருத ஆரம்பித்தது. அதிமுக ரஜினியிடம் மோதுவதை தவிர்த்தது.

அரசியல் ரீதியாக தனது நண்பர்கள் மட்டும் அல்லாமல், பொதுவான பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களை ரஜினி சந்தித்து பேச ஆரம்பித்தார். அடிக்கடி போயஸ் கார்டனில் அரசியல் தொடர்பான சந்திப்புகள் நடைபெற்றன. அமைச்சர்களாக இருக்கும் இரண்டு பேர் நள்ளிரவில்  ரஜினியை வீடு தேடிச் சென்று சந்தித்ததாக கூட தகவல்கள் வெளியாகின. மேலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு பொதுச் செயலாளர் யார், கொள்கை பரப்புச் செயலாளர் யார் என்றெல்லாம் சில பெயர்கள் அடிபட்டன.

ஆனால் அறிவித்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகும் கூட ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகவே இல்லை. ஆனால் தீபாவளிக்கு கட்சி ஆரம்பிப்பார், மதுரையில் மாநாடு, திருச்சியில் மாநாடு என்று யூகங்கள் மட்டும் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் தமிழக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என்று கடந்த பிப்ரவரியில் ஒரேபோடாக போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ரஜினி.

அதன் பிறகு நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அதற்கும் தற்போது வாய்ப்பில்லை என்றும் பிப்ரவரியில் தான் ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ஒரு சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ஆனால் ரஜினியை பொறுத்தவரை கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் அவர் இல்லை என்கிறார்கள். தேர்தல் களம் ஸ்டாலின் – எடப்பாடி என்று தயாராகியுள்ள நிலையில் மக்கள் புதிய ஒருவரை எதிர்பார்ப்பதற்கான சூழல் இல்லை என்று ரஜினி கருதுவதாக கூறுகிறார்கள்.

மேலும் கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட படத்திற்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. எனவே இனி எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் ரஜினி விரைவில் அண்ணாத்த படப்பிடிப்பை முடிக்க உள்ளதாகவும், அதன் பிறகு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் பிறகு பிப்ரவரியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்றும் வழக்கம் போல் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன.

அதே சமயம் தற்போதைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை தள்ளிப்போட்டுள்ள ரஜினி, பிப்ரவரி வரை மக்களின் எழுச்சிக்காக காத்திருக்க உள்ளதாக சொல்கிறார்கள். அப்போதும் எழுச்சி வரவில்லை என்றால் அரசியலுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக களம் இறங்குவது என்கிற முடிவில் ரஜினி உள்ளதாக சொல்கிறார்கள். எனவே மீண்டும் இந்த இடத்தில் இலவு காத்த கிளி கதையை நினைவுபடுத்துவதை தவிர் வேறு வழியில்லை.