அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் மட்டும் செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் மட்டும் செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதி ஒன்றிய சேர்மன் தருமனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. தருமன் அதிமுகவை சேர்ந்தவர். இந்த நிலையில்தான் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு சென்ற ராஜேந்திரனை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக குற்றஞ்சாட்டியதாக புகார் எழுந்துள்ளது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி திட்டிய சம்பவம் முதுகுளத்தூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்படுவதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுக்கடுக்கான புகாருக்குள்ளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் மட்டும் செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்து விட்டால் அவர் புனிதராகி விடுவார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறாரா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா? சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்? ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா? என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
