மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைப்பு செய்திடவும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சரத்குமார் அறிக்கை 

பெட்ரோல். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக பெட்ரோ, டீசல் விலை உயராவிட்டாலும் தற்போதைய நிலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110 வரை விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்காகப் போராட்டம்

அந்த அறிக்கையில் சரத்குமார் கூறுகையில், “தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைப்பு செய்திடவும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் 30.04.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

போராட்டத்துக்கு அழைப்பு

எனவே, மத்திய, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி வாரியாக அறிவிக்கப்பட்ட விளக்கவுரை பொறுப்பாளர்களும், மண்டல அமைப்புச் செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாநகராட்சிக்குட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு மற்றும் அணி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு, மக்கள் நலனுக்கான ஆர்ப்பாட்டம் வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்''என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.