23 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ ராஜ்யசபா எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் அவருக்கு பெரும் சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதென்று நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க உறுதியளித்து இருந்தது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி-யாக வைகோ தேர்வுசெய்யப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்.பி-யாக டெல்லிக்கு வைகோ செல்வது உறுதியாகியுள்ளது. 

ராஜ்யசபா எம்.பி தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கவுள்ள நிலை திமுக ஆட்சிக் காலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் ஜூலை 5-ல் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

2009-ல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான யுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டுகிறேன் என்கிற நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்று பேசினார். அக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஜூலை 5- ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப்பு வைகோவுக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே அவர் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும்.