புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிட வசதியாக, நெல்லிதோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நாராயணசாமிதான் வேட்பாளர் என்பது உறுதி. காரணம், இந்த தேர்தலே அவருக்காகத்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

அதிமுக சார்பில் யார் வேட்பாளர் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. காரணம், இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஓம்சக்தி சேகர், தலைமையின் கோபத்துக்கு ஆளானதால் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் ஓம்சக்தி சேகரே இத்தொகுதியில் அறிவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.ஓம்சக்தி சேகரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக அவர் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள ஓம்சக்தி சேகர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் நெல்லித்தோப்பு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனை தோற்கடித்தார்.

அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் முன்னாள் முதல்வர் ஜானகிராமனை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஓம்சக்தி சேகர் 6365 வாக்கு பெற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜான்குமாரிடம் தோல்வியடைந்தார். தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் நாராயணசாமியை எதிர்த்து போட்டியிடவுள்ள ஓம்சக்தி சேகர், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் குடும்ப சம்பந்தி ஆவார். முதலமைச்சர் ஜெயலலிதா, சொத்து வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோது குத்தாட்டம் போட்டு பிரபலமானவர் ஓம்சக்தி சேகர்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதில், எதிர்கட்சிகள் அனைவரும் உறுதியாக உள்ளனர். நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுகவுடன், என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி கூட்டணி அமைந்தால் நாராயணசாமிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.