ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு விலக்கியதிலிருந்து, காஷ்மீரில் சொத்து வாங்குவது, காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வது குறித்து பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநில பா.ஜ.க முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவின் மோசமான பாலின விகிதம் குறித்து நேற்று  ஃபதேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

“பேட்டி பச்சோ பேட்டி பாடாவோ(பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) போன்ற பல திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மோசமான பாலின விகிதம், பெண் கருக்கொலை ஆகியவற்றைக் கொண்ட மாநிலம் ஹரியானா. ஆனால் எங்களது திட்டத்தால் பாலின விகிதத்தை 850 முதல் 933 வரை உயர்த்தியுள்ளோம். இது ஒரு சமூக மாற்றத்திற்கான பெரிய வேலை” எனக் கூறினார்.

இந்த மோசமான பாலின விகிதம் எதிர்காலத்தில் எவ்வாறான சிக்கலை உருவாக்கும் என்பதை இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் எவரும் புரிந்து கொள்ளலாம். விகிதப்படி பார்க்கும் போது, குறைவான பெண்கள் மற்றும் அதிகமான ஆண்கள் இருக்கிறார்கள். 

எனவே பீகாரில் இருந்து பெண்களை திருமணத்திற்காக அழைத்து வர வேண்டும் என்று நமது அமைச்சர் ஓ.பி.தன்கர் அடிக்கடி கூறுவது வழக்கம். தற்போது காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வதற்கான தடை நீங்கியுள்ளதால், காஷ்மீர் மாநில பெண்களை திருமணத்திற்கு அழைத்து வரலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஏற்கனவே  உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சைனி, கட்சி தொண்டர்களிடம் பேசும் போது, “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என பேசி அனைவரையும் கண்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.