காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பமாக ராகுலுக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கட்சி  தலைவராக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தமே 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெறவில்லை. இதனால் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். அவரைச் சமாதானப்படுத்த காங்கிரஸ்  தலைவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், தன் முடிவில் உறுதியாக இருந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனையத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் காங்கிரஸ் கட்சியில் தொடங்கியுள்ளன.


புதிய தலைவரை நியமிப்பதில் அசோக் கெலாட், சுஷில்குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே உள்பட 7 காங்கிரஸ் தலைவர்கள் பரிசீலனையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாயின. மேலும் புதிய தலைவரை தேர்வு செய்வதிலும் பங்கு வகிக்க ராகுல் மறுத்துவிட்டதால், தற்போது அந்தப் பொறுப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஏற்றுள்ளார். ஏற்கனவே 7 தலைவர்களின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டுவரும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராக்க சோனியா காந்தி ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் சோனியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி 86 வயதான மன்மோகன் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையே மறந்துவிட்டது’ என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில் அவரை தலைவராக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியிருப்பதால், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.