டெல்லியில் புதிய எம்.பி.களுக்கு அரசு குடியிருப்புகளை அரசு முழுமையாக ஒதுக்காத நிலையில், வசதியான வீடுகளை ஒதுக்க உதவி கேட்டு திமுக எம்.பி. கனிமொழியை தமிழக எம்.பி.க்கள்  நாடி வருவதாகக் கூறப்படுகிறது. 
 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், புதிய எம்.பி.களுக்கு தலைநகர் டெல்லியில் இன்னும் முழுமையாக அரசு வீடுகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை. முந்தைய எம்.பி.க்கள் இன்னும் வீடுகளை காலி செய்யாதது, வீடுகள் மராமத்துப் பணிகள் போன்ற காரணங்களால் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான புதிய எம்.பி.க்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவருகிறார்கள்.


இந்நிலையில் எம்.பி.களுக்கு விரைவாக வீடுகளை ஒதுக்கும் வகையில் மத்திய அரசு எம்.பிக்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் தலைவராக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. சி.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டார். இக்குழுவில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த எம்.பி.களும் இடம் பிடித்தனர். திமுக சார்பில் கனிமொழியும் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூரும் இக்குழுவில் இடம் பிடித்துள்ளார்கள்.
இக்குழு அமைத்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அரசு வீடுகளை ஒதுக்குவது தொடர்பாக எந்தப் பணியும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக எம்.பி.க்கள்  நல்ல வசதிகள் கொண்ட அரசு வீடுகளை ஒதுக்கித் தரும்படி கனிமொழியையும் மாணிக்கம் தாகூரையும் வட்டமடித்துவருகிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகத்தின் புதிய எம்.பி.க்கள் இருவரையும் சந்தித்து கூடுதல் வசதி கொண்ட அரசு வீட்டை ஒதுக்கி தர உதவும்படி கேட்டுள்ளார்களாம்.