புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமராவதியில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, “ஸ்மார்ட்போன்களின் உதவியால் சாதாரண மக்களும் அரசின் ஆன்லைன் சேவைகளைப் பெறமுடியும். 

எனவே அனைத்துக் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப்படும். நமது மாநிலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் சராசரியாக 10.52 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. அதேநேரம், தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் 9.7 சதவிகிதமாகவும், தேசிய சராசரி 7.3 சதவிகிதமாகவும் இருக்கிறது. 

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2013-14ஆம் ஆண்டில் 4.64 லட்சம் கோடியிலிருந்து, 2017-18 நிதியாண்டில் ரூ.8.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 73 சதவிகித வளர்ச்சியாகும். நம் மாநிலத்துக்கு அதிகப்படியான வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், தெலங்கானாவை விட வேகமான வளர்ச்சியை நாம் பதிவுசெய்துள்ளோம்.

நம் மாநிலத்தின் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் மதிப்பு 2013-14ஆம் ஆண்டில் ரூ.1.28 லட்சம் கோடியிலிருந்து 2017-18ஆம் ஆண்டில் ரூ.2.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 97 சதவிகித வளர்ச்சியுடன் வேளாண் துறையில் முதன்மை மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது. 

நம் மாநிலத்தின் தனிநபர் வருவாய் 2014-15ஆம் ஆண்டில் ரூ.93,903லிருந்து 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,42,054 ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 25.9 சதவிகிதம் கூடுதலாகும்” என்று பேசினார்.