தமிழக பாஜகவுக்கு செயல் தலைவர் ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அக்கட்சியின் தமிழக முகங்களாக இருக்கும் எல்லோரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்கள். தமிழகத்தில் இரு இடங்களாவது கிடைக்கும் என்று நினைத்திருந்த பாஜக மேலிடத்துக்கு, இது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

 
தமிழகத்தில் தேர்தல் தோல்வியை அடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வரும் என அக்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன்புகூட தமிழக தலைமை இன்னும் இரு மாதங்களுக்குள் மாற்றப்படலாம் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்திருந்தார். தமிழக பாஜக தலைவராக கடந்த 2014-ம் ஆண்டு தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக அவரே தலைவராக செயல்பட்டுவரும் நிலையில், கட்சியில் புதிய தலைவரை நியமித்து, தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவருகிறது.


இந்நிலையில் தமிழக பாஜகவுக்கு செயல் தலைவர் ஒருவரை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவராக அமித் ஷா செயல்பட்டுவரும் நிலையில், அண்மையில் அக்கட்சியின் செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார். அதுபோல தமிழகத்திலும் செயல் தலைவர் ஒருவரை நியமிக்க கட்சி மேலிடம் திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 
தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையாகவும் துடிப்பான ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.