நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஜனவரி 27-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கோட்டை மற்றும் தமிழக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பரபரத்து கிடக்கின்றன.
தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் தள்ளிப்போனது. இறுதியாக உச்ச நீதிமன்றம் குட்டிய பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன்வந்தது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு  தமிழகத்தில் ஒரே நேரத்தில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்தது. ஆனால், தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஊரகத் தேர்தலை நிறுத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை பல வழிகளில் நாடின. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. புதிதாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியான திமுக கூட்டணி கூடுதலாக வெற்றி பெற்றது.


இந்நிலையில் 9 மாவட்ட ஊரகப் பகுதி தேர்தல் மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே ஜனவரி 27 அன்று நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படக்கூடும் என்று கோட்டை வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன. தேர்தல் பணிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்கும் வகையில் அட்டவணை தயாராகிவருவதாகவும் கோட்டையில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.