அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏ. கருணாஸ் மீண்டும் இணைய ஆர்வம் காட்டிவரும் நிலையில், அக்கூட்டணியில் சிறுகட்சிகளுக்கு  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பங்கீடு  வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிக்கும் என்று  நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றிக்கு எங்கள் படை பாடுபடும் என, முதல்வரிடம் உத்தரவாதம் அளித்துள்ளேன். முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் போட்டியிட சில இடங்களை கேட்டுள்ளோம். துணை முதல்வருடன் கலந்தாலோசித்து, எங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று கருணாஸ் தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டுவந்த கருணாஸ் மீண்டும் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டிவருகிறார்.


அதிமுகவுக்கு எதிராக அதிரடி காட்டிவந்த கருணாஸ், அதிமுகவுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கருணாஸ், தமிம்முன் அன்சாரி, தனியரசு ஆகியோரில் அதிமுக பிளவுக்கு பிறகு தனி ஆவர்த்தனம் நடத்தினார் கருணாஸ். அதிமுக பிளவுக்கு பிறகு சசிகலா - தினகரன் ஆதரவாளராக மாறிய கருணாஸ், திமுக நடத்திய போட்டி சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்று அதிரடி காட்டினார். அதிமுகவுக்கு எதிராகப் பேசிவந்த கருணாஸை, ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக அரசு கைதும் செய்து சிறையில் அடைத்தது.
நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்ற கலகத்தில் இலை தரப்பு, கருணாஸை தகுதி நீக்கம் செய்யும் அளவுக்குக்கூட யோசித்தது. ஆனால், போதுமான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதால், இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்ற கருணாஸை மட்டுமல்ல, தனியரசு, தமிம்முன் அன்சாரி ஆகியோரையும் அதிமுக கொண்டுகொள்ளவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது முதல்வர் எடப்பாடியை கருணாஸ் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி மேம்பாட்டுக்காகச் சந்தித்தேன் என்று கருணாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு நடிகர் கருணாஸ் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியின் கருணையும் தேவை என்பதால், தற்போது அதிமுக கூட்டணியிலேயே தொடர கருணாஸ் முடிவு செய்ததால், முதல்வர் எடப்பாடியைக் கருணாஸ் சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தற்போது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, புதி நீதி கட்சி ஆகியவற்றுடன் உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது அதிமுக. கருணாஸ், தனியரசு, தமிம்முன் அன்சாரி ஆகியோரின் கட்சியிடம் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அதிமுக தங்களை கழற்றிவிட்டதாக கருதிய நிலையில், எம்.எல்.ஏ. கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேசி மீண்டும் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டியுள்ளார் என்கின்றன அதிமுக தரப்பில்.  ஆனால், உள்ளாட்சித்தேர்தலில் கருணாஸ் உள்ளிட்டவர்களுக்கு அதிமுக பங்கீடு வழங்குமா என்பது மில்லியன்  டாலர் கேள்விதான் என்கின்றன் அதிமுக வட்டாரங்கள்.