தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.

கொரோனாவால் எத்தனை தமிழக மருத்துவர்கள் இறந்தனர் என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா? நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக 43 மருத்துவர்கள் தமிழகத்தில் உயிரிழந்ததாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வளையை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ராதாகிருஷண்ன் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா தடுப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இன்னும் அதிகரிக்கப்படும். தமிழக அரசு கொரோனா விசயத்தில் மிகவும் வெளிப்படத்தன்மையாக இருக்கிறது.

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஐ.எம்.ஏ.-வின் மாநிலத் தலைவரே இதை மறுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகள் மருத்துவர்களின் மன உறுதியை குறைக்கும். ஐ.எம்.ஏ. தெரிவிக்கும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.