மனைவி தன்னை கள்ளகாதலனை ஏவி கொலை செய்ய முயற்சித்தாக மருத்துவமனையில் இருந்து குடும்பத்தார் மற்றும் காவல்துறையினருக்கு கணவன் வீடியோ அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35) ஓட்டுனராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா,  இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சுரேஷின் பால்ய நண்பரான வினோத் என்பவர் அடிக்கடி சுரேஷின் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் சுரேஷின் மனைவி சரண்யா மற்றும் வினோத் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் சுரேஷ்க்கு தெரியவர இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரண்யா மற்றும் வினோத் கள்ளகாதல் விவகாரம் சரண்யா குடும்பத்தாருக்கும் , அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வர சரண்யா குடும்பத்தார், சரண்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி தனது  குழந்தயை விட்டு விட்டு வினோத் உடன் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக தன்னை மனைவியோடு சேர்த்து வைக்க கோரி டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுரேஷ். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாமியார் வீட்டில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற சுரேஷை,  சரண்யா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசவேண்டும் என அழைத்துள்ளார். மனைவி அழைக்கிறார் என அங்கு சென்ற பொழுது வினோத் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் சராமாரியாக தாக்கியுள்ளார். 

அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதில் முகம் , தலை, கைகளில் பலத்த காயமடைந்த சுரேஷ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டிபி சத்திரம் போலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் இன்று வாட்சப் மூலம் தனது குடும்பத்தார் மற்றும் காவல்துறையினருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன்னை கொலை செய்ய தனது மனைவியும் , கள்ளக் காதலன் வினோத்தும் திட்டமிட்டுள்ளதாகவும், இன்றும் தன்னை தொலைப்பேசி மூலமாக மிரட்டல் விடுத்ததாகவும், தனக்கு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் தனது மனைவியும், கள்ள காதலன் வினோத்துமே காரணம் என அந்த வீடியோவில் அவர் பதிவு செய்து அனுப்பியுள்ளார். கள்ளகாதலனோடு சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் செனாய் நகரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.