இந்தியத் திரைப்படத் துறையில் பங்காற்றியவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது  நடிகர் ரஜினிகாந்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி, ‘தலைவா’ என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த விருது  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி ரசிகர்களைக் கவரும் வகையில் அறிவிக்கப்படுவதாக சில அரசியல் கட்சிகள் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் மிகவும் மதிக்கப்படக்கூடிய நடிகர். நம்முடைய பிரபலங்களைத் தேவையில்லாமல் அரசியல் சிக்கல்களுக்குள் மத்திய அரசு இழுத்துவிடுகிறது. ஒவ்வொரு விஷயத்தையுமே அரசியல் ஆதாயத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செய்கிறது. ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை முன்பே வழங்கியிருக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் அறிவிக்கப்பட்டது ஏன்? இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசும் பாஜகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு என்ன செய்தாலும் அரசியல் நோக்கத்தோடு செய்வது முறையில்லை. மக்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடிகர் ரஜினிகாந்த் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்படக்கூடிய சிறந்த மனிதர். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவருடைய சினிமா வாழ்க்கை மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்” என்று ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.