தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையாக உழைத்தவர்கள் என்றால் அவர்களை கைவிட்டு எண்ணிவிடலாம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், எதிர்ப்பார்புகள் நிறைவேறாமல் போனாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர் வசந்தகுமார். காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி மீது அளவு கடந்த பாசம் வைத்தவர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் தாமாக முன்வந்து கட்சிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மிக பிரமாண்டமாக நடத்தியவர் வசந்தகுமார். நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்த சமயம்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஜி.கே.வாசன் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் த.மா.காவை தொடங்கினார். இதனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்குவங்கியே இல்லாமல் போய்விட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜி.கே.வாசன் தொண்டர்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் என்று கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டார். இளங்கோவன் ஓடி ஆடி வேலை செய்யக்கூடியவர்.

ஆனால் அவரிடம் கட்சிக்கு செலவு செய்ய காசு கிடையாது.இந்த சமயத்தில் திருச்சியில் வாசன் நடத்திய மாநாட்டிற்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டிற்கு முழு செலவையும் ஏற்றுக் கொண்டவர் வசந்தகுமார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருந்த காங்கிரஸ் தொண்டர்களை திருச்சி அழைத்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் வசந்தகுமார். வாசன் நடத்திய மாநாட்டை விட காங்கிரஸ் நடத்திய மாநாடு பிரமாண்டமாக அமைந்தது. இதற்கு காரணம் வசந்தகுமார் தான் என்று அப்போது ராகுல் காந்தி வெளிப்படையாக பாராட்டினார்.

இது போன்று காங்கிரஸ் தமிழகத்தில் தர்மசங்கடத்தை சந்திக்கும்  போதெல்லாம் அதற்கு உற்றதுணையாக இருந்து வந்தவர் வசந்தகுமார். அவருக்கு எப்படியேனும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஒரு கனவு இருந்தது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அதற்காக கடுமையாக முயற்சித்தார் வசந்தகுமார். மாநிலங்களவை எம்பியாகி மத்திய அமைச்சராகவசந்தகுமார் மேற்கொண்ட முயற்சிகள் எதற்கும் பலன்கிடைக்கவில்லை. வசந்தகுமாருக்கு கிடைக்க வேண்டிய எம்பி பதவி மற்றும் மத்திய அமைச்சர் பதவி சுதர்சன நாச்சியப்பனுக்கு சென்றது.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து காங்கிரசுக்கு உழைத்து வந்தவர் வசந்தகுமார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்ட நிலையில் மத்திய அமைச்சராக வாய்ப்பு இல்லை என்று தெரிந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் வாய்ப்பு வசந்தகுமாருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வசந்தகுமாரும் தனக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கே.எஸ்.அழகிரி கொடுக்கப்பட்டு, வசந்தகுமாரை செயல் தலைவராக நியமித்தது காங்கிரஸ் மேலிடம்.

இப்படி எவ்வளவு தான் காங்கிரசுக்கு உழைத்துவம் அவருக்கு உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் கொடுக்கவேஇல்லை என்று அவரது ஆதரவாளர்கள் மட்டும் இன்றி அவரது குடும்பத்தினருக்கும் ஆதங்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் வசந்தகுமார் மறைவை தொடர்ந்து அவரது உடலை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்கு வைக்க கே.எஸ்.அழகிரி ஏற்பாடு செய்தார். ஆனால் உடலை அங்கு எடுத்துச் செல்ல வசந்தகுமாரின் மனைவி அனுமதிக்க மறுத்துவிட்டார். கடைசி வரை எனது கணவருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை, கட்சிக்கு எவ்வளவோ உழைத்தும் என் கணவருக்கான அங்கீகாரம் காங்கிரசில் கிடைக்கவில்லை, மரியாதை இல்லாத ஒரு இடத்திற்கு எனது கணவரின் உடலை கொண்டு செல்ல அனுமதிக்கமாட்டேன் என்று அவர் கூறிவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் தான் சத்தியமூர்த்தி பவனுக்கு பதிலாக சென்னை காமராஜர் அரங்கில் வசந்தகுமார் உடல் வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.