திமுக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சிலர் கூறும் கருத்துக்களுக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை எங்கள் கருத்துக்களும் அல்ல என்று நாங்கள் சொன்னால் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என திமுக ஐடி விங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மனுஷ்யபுத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.  

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு 800 என்ற படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதை விஜய் சேதுபதி பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் விஜய்சேதுபதியை படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்த விஜய் சேதுபதி, நன்றி... வணக்கம் என விஜய் சேதுபதி கூறியிருந்தார். இந்நிலையில் இது சம்பந்தமாக ஒருவர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது காண்போர் அனைவருக்கும் ஆத்திரத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக உள்ளது. அதை வெளியிட்ட நபருக்கு பெரும்பாலானோர், குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திமுக ஐடி விங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் டுவிட்டரின் ஆதங்கத்துடன் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் "விஜய சேதுபதியின் மகள் குறித்து வக்கிரமாக எழுதுகிறவன் அஜித் படத்தை ப்ரஃபைல் படமாக வைத்திருப்பதாலேயே அவன் அஜித் ரசிகனாகிவிடமாட்டான், அதற்கு அஜித் பொறுப்பல்ல, அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற வாதத்தை முழுமையாக ஏற்கிறேன். அதேபோல "அந்த நபர் விஜய் சேதுபதியை  தாக்குவதாலேயே அவன் ஈழ ஆதரவாளரோ தமிழ் தேசியவாதியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை, 

இதற்காக எங்களைத் தாக்காதீர்கள்" என்ற வாதத்தையும் ஏற்கிறேன்.ஆனால் திமுக ஆதரவாளர்களாக தங்களை கூறிக்கொள்ளும் சிலர் வரம்புமீறி தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை எங்கள் கருத்துக்களும் அல்ல என்று நாங்கள் சொன்னால் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? யார் எதை எதை மோசமாக எழுதினாலும் 'இது  திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர்  வேலை' என்றும்,  கட்சித்தலைமை மன்னிப்புகேட்க வேண்டும் என்றும் அடாவடி செய்வது எதற்காக? நீங்கள் எந்த நியாயத்தை கோருகிறீர்களோ அதை முதலில்  மற்றவர்களுக்கு வழங்குங்கள். என அவர் கூறியுள்ளார்.