why the court enquiry the MLA case told stalin

.11 எம்எலஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது அப்படின்னா அந்த வழக்கை ஏன் விசாரித்தீர்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்து வந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இரு வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமாக குறிப்பிட்டது சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்பதுதான். எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின், “மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் திமுக.வின் சட்ட போராட்டம் தொடரும். சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாது எனில் இத்தனை காலம் வழக்கை விசாரித்தது ஏன்?. தீர்ப்பை தள்ளிப்போட்டது ஏன்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.